பொள்ளாச்சி அருகேயுள்ள அம்பராம்பாளையத்தில் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
தமிழகம்

கேரளா வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: பொள்ளாச்சியில் ஆய்வு செய்த அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், கேரளா வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

தமிழ்நாடு முதல்வரின் ஆணைப்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையத்தில் சுப்ரமணியம் என்பவரின் தோட்டத்தில் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகள் மற்றும்வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: கேரளா வாடல் நோய் தற்போது கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாக தென்படுகிறது.கோவை மாவட்டத்தில் தென்னைஅதிகமாக சாகுபடி செய்யப்படும்பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை வட்டங்களில் தென்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்திட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், தென்னை நோய் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து, தென்னை விவசாயிகள், விவசாய சங்கங்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் கருத்துக்கள், களஆய்வு விவரங்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

ஒரு மாத காலத்திற்குள் வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர், வேளாண்மை துறை அலுவலர்கள் தென்னை மரங்களின் பாதிப்பு குறித்து நேரடியாக களஆய்வு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளும், அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நோயை கட்டுப்படுத்தமுடியும்.

இந்நோய் தாக்கத்தால், பாதிக்கப்பட்ட மரங்களிலிருந்து அருகில் உள்ள மரங்களுக்கு பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மற்ற பயிர்களை போன்று தென்னைக்கும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் வேளாண் துறை அரசு முதன்மைச் செயலாளர்அபூர்வா, கு.சண்முகசுந்தரம் எம்.பி.தோட்டக்கலை- மலை பயிர்கள் துறை இயக்குநர் குமார வேல் பாண்டியன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் அறவாளி, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளா வாடல் நோயால் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம்தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் நோய் பரவலை கட்டுப்படுத்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளா வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கும் காப்பீடு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதால், காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற்பனை செய்வது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. உணவில் தேங்காய் எண்ணெய் உபயோகம் குறைவாக இருப்பதால் இதற்கான ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.அம்பராம்பாளையத்தில் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். உடன், அரசு முதன்மை செயலாளர் அபூர்வா , கு.சண்முகசுந்தரம் எம்.பி., தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர்.

SCROLL FOR NEXT