சேலத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், சேலம் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் காளிமுத்து உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 
தமிழகம்

சேலம் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் அதிமுகவில் ஐக்கியம் - பாஜக உடனான கூட்டணியால் விலகல்

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் உள்பட மாற்றுக் கட்சியினர், தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவரும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான காளிமுத்து, கல்பகனூர் ஊராட்சித் தலைவர் ராஜாத்தி காளிமுத்து ஆகியோர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுடன் நரசிங்கபுரம் 18-வது வார்டு பகுதியைச் சேர்ந்த நூரு முகமது, சந்தோஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இரு தினங்களுக்கு முன்னர், ஆத்தூரை அடுத்த பெத்த நாயக்கன் பாளையத்தில், வசிஷ்ட நதி - கைக்கான் ஓடை இணைப்புத் திட்டத்தை செயல் படுத்தியதற்காக, வசிஷ்ட நதி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கங்கள் சார்பில் விவசாயியான தமாகா சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் காளி முத்துவும் கலந்து கொண்டு, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து பேசியிருந்தார். இந்நிலையில் அவர் தமாகாவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் காளிமுத்து கூறியதாவது: தமாகா நிறுவனர் மூப்பனாரின் கொள்கைக்கு முரணாக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தேன். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து, தமாகாவில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, கட்சியின் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆதரவாகவே இருந்தனர். ஆனால், பலரின் விருப்பத்துக்கு மாறாக, பாஜகவுடன் கூட்டணி அறிவித்திருப்பதால் தமாகாவில் இருந்து விலகினேன், என்றார்.

SCROLL FOR NEXT