கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரத்தில் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையைக் கிராம நிர்வாக அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தனர்.
திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவன், பெருமாள் கோயில்களின் 4 வீதிகள், மணல் மேட்டுத் தெரு, தோப்புத் தெரு, நேதாஜி திடல் ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆயிரம் குடியிருப்புகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 3 தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் வரிகள் செலுத்தி, மின் இணைப்புகள், ரேசன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் வசித்து வரும் குடியிருப்புகளுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு வழங்கியும், பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும், மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில், அரசு பதிவேட்டில் ஏற்பட்ட தவறை சரிசெய்து எங்களுக்குப் பட்டா வழங்க மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் வகையில், அந்தப் பகுதியில் உள்ள 8 ஆயிரம் வாக்காளர்கள் திருநாகேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
அதன்படி பிப்ரவரி 28-ம் தேதி, வார்டு உறுப்பினர்கள் நவநீதம், பாலா, உப்பிலி, வெங்கடேஷ், தமிழ் மணி, தமிழ் மாநில காங்கிரஸ் செந்தில் குமார், அதிமுக செல்வராஜ் ஆகியோர் தலைமையில், 8 ஆயிரம் வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை 4 பெட்டிகளில் நிரப்பி, திருநாகேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கச் சென்றனர்.
ஆனால் அங்கு கும்பகோணம் கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா இருந்ததால், அவர்கள், அந்த அட்டைகள் நிரப்பிய பெட்டிகளை, அந்த அலுவலகத்துக்குள் வைத்தனர். பின்னர், கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா, உயரதிகாரிகளிடம் தகவலளித்து பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். ஆனால் அந்தப் பகுதி மக்கள், பட்டா வழங்கியவுடன், அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்கின்றோம், வழங்கா விட்டால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனப் பதில் அளித்து விட்டு திரும்பிச் சென்றனர்.