விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தில் கடந்த 2010-ம் ஆண்டு பல விவசாயிகள் தங்களது நகைகளை வைத்து கடன் பெற்றனர்.
விளைச்சல் முடிந்ததும் நகைகளை மீட்கும் எண்ணத்தில் இருந்த விவசாயிகளுக்கு விளைச்சல் தேதி நெருங்கிய நேரத்தில், கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,780 சவரன் நகைகள் திருடு போனதாக தகவல் வந்ததால் அதிர்ச்சி யடைந்தனர். திருடுபோன நகைகள் தற்போது வரை மீட்கப்பட வில்லை. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டில் ஈடுபட்டதாக கூறி சங்கத்தில் பொறுப்பில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2010-ல் திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.1.64 கோடியாக இருந்தது. இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் நகைகளை இழந்த விவசாயிகளுக்கு அவர்களின் நகை மதிப்புக்கு இணையாக இழப்பீடு தருவதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் 2019-ம் ஆண்டு உறுதியளித்திருந்தனர். தற்போது வரை எந்த இழப்பீடும் வழங்கவில்லை.
இந்நிலையில் திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை 100-க்கும் மேற் பட்ட விவசாயிகள் பட்டை நாமம் அணிந்து முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறி வித்திருந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் திருநாவலூர் கடைவீதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் பட்டை நாமம் அணிந்து போராட்டம் நடத்துவதற்காக நேற்று ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை உட்பட100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் வலுக் கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் போலீஸாருக்கும் விவசாயிகளுக்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.