திண்டுக்கல்: மக்களவைத் தேர்தலில் திண்டுக் கல் தொகுதியில் நிறுத்துவதற்கு இளம் வேட்பாளரை திமுகவும், தொழிலதிபரை அதிமுகவும் தேடி வருகின்றன.
கடந்த தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ப.வேலுச்சாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே என அக்கட்சியினர் கூறிவருகின்றனர். இதனால் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட திமுக நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருப்பதால் எப்படியும் நம்மை வெற்றி பெறச்செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பலரும் திமுகவில் சீட் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக ஒருவரை களம் இறக்க மாவட்ட திமுக முடிவு செய்து வேட்பாளரை தேடும் பணியில் இறங்கியுள்ளது. இந்த முறை இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இளம் வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்கின்றனர் திமுவினர். படித்த, வசதியுள்ள திமுக நிர்வாகிகளின் வாரிசுகள், திமுக அனுதாபியாக உள்ள குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் என வேட்பாளரை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.
திமுக வேட்பாளரை தேர்வு செய்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோரின் ஒப்புதலுக்கு பின்பு, கட்சித் தலைமைக்கு வேட்பாளரை பரிந்துரை செய்ய உள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக போட்டியிட்டது.
இந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் அதிமுக நேரடியாக களம் இறங்க உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இங்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவ நாதன் ஆகியோரின் வாரிசுகளில் ஒருவரை களமிறக்க பொதுச் செயலாளர் பழனிசாமி விருப்பம் தெரிவித்த போதும், இருவரும் பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து முன்னாள் மேயர் மருத ராஜின் வாரிசையோ அல்லது வேட சந்தூர் முன்னாள் எம்எல்ஏ பரம சிவத்தையோ களமிறக்கலாம் என்று பழனிசாமி முடிவு செய்திருந்தார். ஆனால், அவர்கள் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக போட்டியிடச் செய்ய அதிமுக அனுதாபிகளாக உள்ள தொழிலதிபர்களை தேடத் தொடங்கியுள்ளனர். இதில் கிரஷர் உரிமையாளர் ஒருவரிடமும், நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவரிடமும் அதிமுகவினர் பேசி வருகின்றனர்.