வடலூரில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். 
தமிழகம்

“சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை” - அன்புமணி விமர்சனம்

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் விளக்கப் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்து கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது: 157 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதி மக்கள் இந்த இடத்தை வழங்கினார்கள். ஆனால் தற்போது இதில் சர்வதேச மையம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திமுக கொள்கைக்கும் வள்ளலாருக்கும் என்னசம்பந்தம்? வள்ளலார் கொள்கைக்கு எதிராக கஞ்சா, போதைப் பொருட்கள், மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல குடும்பங்களின் தாலி அறுக்கப்பட்டுள்ளது.

இங்கு பெரு வெளியில் சர்வதேச மையம் அமைக்க 100 சதவீதம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனை சென்னையில் கட்டினால் உலகம் முழுக்க வள்ளலார் புகழ்ஓங்கி நிற்கும். மீண்டும் இங்கேதான் கட்டுவேன் என்று சீண்டி பார்க்காதீர்கள். தமிழகத்தில் மற்ற கட்சி எல்லாம்தேர்தல் வெற்றிக்காக போராடுவார்கள். நாம்தான் மண்ணையும், மக்களையும் காக்க போராடி வருகிறோம். என்எல்சியில் மூன்றாவது சுரங்கம் அமைக்க யாராவது வாய் திறந்தால் நாங்க சும்மா இருக்க மாட்டோம். தற்போது தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் தடை செய்துள்ளீர்கள். பஞ்சு மிட்டாயை விட பல்லாயிரம் மடங்கு போதைகள் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதை ஏன் தடுக்கவில்லை? ஏனென்றால் அதன் மூலம் உங்களுக்கு லாபம் வருகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? கர்நாடக உள்ளிட்டமாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் வன்னியர்கள் வளர்ச்சி அடைந்ததாக தமிழக சட்டப் பேரவையில் தவறான கருத்தை அமைச்சர்கள் கூறுகி றார்கள். இது மோசடி, ஏமாற்று வேலை. திமுக சமூக நீதி பற்றி பேச தகுதியற்றவர்கள். இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பறவைகள் வருகிறது என கணக்கெடுப்பு நடத்துகிறீர்கள். ஆனால் எத்தனை மனிதர்கள் உள்ளார்கள் என சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் உங்களுக்கு தயக்கம்? தமிழகத்தில் இரு கட்சிகளும் தடுப்பணையை கட்டமாட்டார்கள். ஏனென்றால் மணல் கொள்ளையில் ஈடுபட முடியாது என்பதற்காக தான் என பேசினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக அரசு 77 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தி சர்வதேச மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை கடுமையாக எதிர்த்தாலும் எங்களது நோக்கம் வடலூரில் உள்ள பெருவெளியில் எந்தக் கட்டு மானங்களும் இருக்கக் கூடாது என்பதாகும். வள்ளலார் சர்வதேச மையத்தை பெரு வெளிக்கு அருகில் 500 அல்லது 1,000 ஏக்கர் இடத்தை எடுத்து அமைக்க வேண்டும்.

இதனால் வள்ளலார் புகழ் அதிகமாக பரவும். வள்ளலார் வாழ்ந்த இந்த மண்ணை தமிழக அரசு எந்த விதத்திலும் சிதைக்கக் கூடாது. மக்களவைத் தேர்தலில் பாமக நிலைப்பாடு தொடர்பாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை. வதந்திகள். ஊடகத்துக்கு என்ன அவசரம்? கூட்டணி என்பது திடீரென முடிவாவது அல்ல. அது பல கட்சிகளை சார்ந்தது. ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும்” என்றார். மாவட்ட செயலாளர்கள் ஜெகன்உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT