திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே நடந்த சாலை விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி திண்டுக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நிர்மலா சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார்(63). சென்னை, மணலிபுதுநகர் அருகே நாப்பாளையம் பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த 1991-ம் ஆண்டு முதல், 1996 வரை பொன்னேரி தொகுதியின் அதிமுக எல்எல்ஏவாக இருந்தவர். தற்போது திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளராக இருந்து வந்தார்.
இவர் எம்எல்ஏவாக இருந்த காலத்தில், திண்டுக்கல் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தலைமையில் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வரும் ரவிக்குமாரின் மகள் ரவீனா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு வார விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தார். அவரை நேற்று காலை ரவிக்குமார் தன் மனைவி நிர்மலாவுடன் காரில் சென்று மகளை கல்லூரியில் விட்டுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, கார் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், மீஞ்சூர் அருகே சீமாவரம் சுங்கச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ரவிக்குமாரும், அவரது மனைவி நிர்மலாவும் மீஞ்சூர் போலீஸாரால் மீட்கப்பட்டு மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், ஏற்கெனவே ரவிக்குமார் உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, நிர்மலா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு, அவர் சென்னை, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், கார் ஓட்டுநர் விடுப்பு எடுத்துக் கொண்டதால், ரவிக்குமாரே காரை நீண்ட தூரம் ஓட்டி சென்று திரும்பி கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரவிக்குமார் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான, முன்னாள் முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.