சென்னை: 2024 மக்களவைத் தேர்தலுக்கான தமிழக பாதுகாப்பு பணியில், 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. மார்ச் 1-ம் தேதி 15 கம்பெனி படையினரும், மார்ச் 7-ம் தேதி 10 கம்பெனி படையினரும் தமிழகத்துக்கு வரவுள்ளதாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவைகளுக்காகவும் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அவற்றுள் 15 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 2024 மார்ச் 1 அன்றும் 10 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 2024 மார்ச் 7 அன்றும் தமிழகத்துக்கு வழங்கப்படவுள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். ஓட்டுக்காக பணம், மது, பரிசுப் பொருட்கள் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும். குறிப்பாக, தேர்தல் அலுவலர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும். அதிக அளவில் சிசிடிவி பொருத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரை குவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.