சென்னை: தமிழக பட்ஜெட்டில் சிறு, குறுந்தொழில்களுக்கு ரூ.1,557 கோடி ஒதுக்கப்பட்டது போதுமானதாக இல்லை. கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ‘டான்ஸ்டியா’ தலைவர் சி.கே.மோகன், பொதுச் செயலாளர் எஸ்.வாசுதேவன் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முதல் தலைமுறை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.101 கோடி அளவுக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மண்டலத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் புதிய தொழிற்பூங்கா அமைப்பது, தூத்துக்குடியில் வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை டான்ஸ்டியா வரவேற்கிறது.
அதேநேரம், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு ரூ.1,557 கோடி என்பது போதுமானதாக இல்லை. கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். குறு, சிறு தொழிற்சாலைகளில் சூரிய மேற்கூரை அமைக்க மூலதன மானியம் ஒதுக்க வேண்டும்.
மின்சார நிலைக் கட்டண உயர்வால் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இதை குறைக்க பல்வேறு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தும், நிலைக் கட்டணத்தை குறைக்க எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.