சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய முடிவுகள், செலவினங்கள், புதிய திட்டங்களுக்கு, அந்தந்த பல்கலை. சிண்டிகேட் குழுவில் விவாதித்து ஒப்புதல் பெறப்படுவது வழக்கமாகும். இந்தக் குழுவில் துணைவேந்தர், பதிவாளர் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் இடம் பெறுவர்.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவுக்கு புதிதாக 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவுக்கு உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் 4 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் சென்னை அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரி இணை பேராசிரியர் (எம்சிஏ) டி.வேல்முருகன், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் (தாவரவியல்) டி.ஆனந்த், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி இணை பேராசிரியர் (கணிதம்) எம்.அனந்த நாராயணன், தாம்பரம் எம்சிசி முதல்வர் பி.வில்சன் ஆகியோர் சிண்டிகேட் குழுவில் இணைந்துள்ளனர்.
இவர்கள் 2027 பிப்ரவரி 23-ம் தேதி வரை 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் உள்ள நிலையில், சிண்டிகேட் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.