பல்லாவரம்: பல்லாவரத்தில் வன்னிய குல சத்திரியர்களின் முதல் ஆன்மிக மாநாடு நேற்று நடைபெற்றது. வன்னியர் குல சத்திரியர்களின் முதல் ஆன்மிக மாநாட்டில் முதல் நிகழ்வாக உலக மக்கள் நலம் பெற வேண்டி ஸ்ரீ சம்பு மகரிஷி சிறப்பு வேள்வி நடைபெற்றது. பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி ஆன்மிக மாநாட்டை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஆன்மிக மாநாட்டில் இறையாளர்கள், அருளாளர்கள், சித்தர்கள், குருமார்கள், அடியார்கள், ஆன்மிக பெரியோர்கள், தலைவர்கள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
ஸ்ரீ சம்பு மகரிஷி படத் திறப்பும், சுவாமி ஸ்ரீ ருத்ர வன்னியர் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜரிஷி அர்த்தநாரீஸ் வர்மா நூல் வெளியீட்டு விழாவும், அருளாளர்கள் ஆசியுரையும், வன்னிய குல குருமார்கள், அடியார்கள், அனைவருக்கும் திருவடி பூஜையும் நடைபெற்றது. பசுமை தாயகம் மாநில துணைசெயலாளர் ஐ.நா.கண்ணன், பாமக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், நிர்மல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.