திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்குப் பல்வேறு விவசாயச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு 3,200 ஏக்கர் விளை நிலங்களைக் கையகப்படுத்தத் தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 7 மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அனைவரையும் தமிழக அரசு விடுவித்தது. மேலும் சட்டப்பேரவையில் நிலமற்றவர்கள் போராடுகிறார்கள் என்ற பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மேல்மா கூட்டுச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைக் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கம், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு கழகம், ஏர்முனை, இந்திய விவசாயிகள் சங்கம், காவிரி வைகை குண்டாறு நீர்ப்பாசன விவசாயச் சங்கம், ஐக்கிய விவசாயச் சங்கம், கரும்பு விவசாயிகள் அணி, தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து களைத் தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் பேசும் போது, “மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும், விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.