மதுரை: பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி இரவு தங்க உள்ள பசுமலை தாஜ் ஹோட்டலுக்கு காரில் செல்ல உள்ள பழங்காநத்தம்-பசுமலை சாலை, கடந்த 2 ஆண்டாக குண்டும், குழியுமாகவும், தூசி மண்டலமாகவும் உள்ளது. பிரதமர் வருகையால் இந்த சாலை, புதுப்பொலிவு பெறுமா? என மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.
பிரதமர் மோடி, வரும் 27-ம் தேதி மதுரை வீரபாஞ்சான் டிவிஎஸ் பள்ளியில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர், சாலை மார்க்கமாக வீரபாஞ்சானில் இருந்து காரில் பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டல் செல்கிறார். இரவு அந்த ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் தூத்துக்குடியில் நடக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கு மதுரையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் செல்கிறார்.
வீரபாஞ்சானில் டிவிஎஸ் பள்ளி நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிரதமர் மோடி இரு சாலை வழியாக பசுமலை ஹோட்டலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோரிப்பாளையம், சிம்மக்கல், பழங்காநத்தம் வழியாக பசுமலைக்கு செல்லாம். மற்றொரு பாதையாக தெற்குவாசல், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், டிவிஎஸ் நகர், பழங்காநத்தம் வழியாக பசுமலைக்கு செல்லலாம். ஆனால், தற்போது பிரதமர் மோடி, வீரபாஞ்சானில் இருந்து பசுமலை செல்லும் சாலையை மாநகர காவல் துறையினர் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், பிரதமர் வருவதாக எதிர்பார்க்கப்படும் பழங்காநத்தம்- பசுமலை சாலை, கற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளது. இந்த சாலையில்தான் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்ளது. ஏராளமான பள்ளி, கல்லூரிகள் உள்ளன. திருமங்கலம், திருநகர் போன்ற முக்கிய நகர் பகுதிகள் உள்ளன. அதனால், பழங்காநத்தம் வழியாக செல்லும் திருப்பரங்குன்றம் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், பழங்காநத்தத்தில் இருந்து பசுமலை வரை, வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாத அளவிற்கு இந்த சாலை சிதிலமடைந்து உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், ‘‘பழங்காநத்தம் சாலையில் குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், மழைநீர் கால்வாய் பணிகள் நடக்கிறது. இந்த பணிக்காக சாலையோரம் குழிகள் தோண்டிப் போட்டுள்ளனர். தினமும் ஆபத்தான நிலையிலே பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. பல்வேறு பணிகள் இந்த சாலையில் நடப்பதால் இப்பகுதியில் புதிய சாலை போடப்படவில்லை. சாலையில், சரளை கற்கள், மணல் அதிகளவு உள்ளன. அதனால், வாகனங்கள் சாலையில் செல்லும் புழுதி பறந்து புகை மண்டலம் போல் உள்ளது. வாகன ஓட்டிகள், மக்கள் புழுதிக் காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறுகிறது. சாலையை அகலப்படுத்துவதற்காக இப்பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து போட்டு அகற்றப்படாமல் உள்ளதால் அவை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.
பழங்காநத்தத்திற்கு அருகே பசுமலை செல்லும் இந்த சாலையில் அழகப்பன் நகர் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் மூடப்பட்டால் பழங்காநத்தம் முதல் பசுமலை வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். வாகனங்கள், ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதுதவிர, 4 திருமண மண்டபங்கள், திருப்பரங்குன்றம் கோயில் இப்பகுதியில் உள்ளது. முக்கிய முகூர்த்த நாட்களில் பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் திருவிழா போல் காணப்படும். மக்கள், பழங்காநத்தம் முதல் பசுமலை வரை சாலையை கடக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய உள்ளது.
இந்த சாலை வழியாகத்தான் பிரதமர் மோடி, காரில் பசுமயைில் இரவு தங்கும் தாஜ் ஹோட்டலுக்கு செல்ல உள்ளார். பிரதமர் வருவதாக கூறப்படும் இந்த சாலை தற்போது சீரமைக்கப்படவில்லை. அவர் வருகையை ஓட்டியாவது இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார்.