சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளுக்காக பாஜக தேசிய தலைவர்கள் அடுத்த மாதம் தமிழகம் வருகின்றனர். முன்னதாக மார்ச் 4-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் கவனம் செலுத்தியுள்ளனர். பாஜகவுடன் அதிமுக உறவை துண்டித்த நிலையில் பாமக, தேமுதிகவை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பாஜகவும் அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. அதே சமயம், தமிழகத்தில் தனித்து களம் காணவும் பாஜக தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 3-வது முறையாகவும் பாஜகதான் மத்தியில் ஆட்சியில் அமைக்கப் போகிறது என அதீத நம்பிக்கையுடன் இருக்கும் பாஜகவினர் தற்போது, சிறு, சிறு கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது.
எனவே பாமக, தேமுதிகவுடன் கூட்டணி அமையவில்லையென்றால், கூட்டணியில் இடம் பெறும் அனைத்து கட்சி வேட்பாளர்களையும் தாமரை சின்னத்தில் களமிறக்க இருப்பதாக பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலையின் நடை பயண நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். அந்த வகையில், தமிழகத்துக்கு இந்த ஆண்டு 2-வது முறையாக பிப்.27-ம் தேதி மோடி வருகிறார். 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 27-ம் தேதி பல்லடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசுகிறார்.
பொதுக் கூட்டத்துக்கு பிறகு மோடியை அண்ணாமலை சந்திக்கிறார். அந்த சந்திப்புக்கு பிறகே மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்றும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது, எந்த தொகுதியை ஒதுக்குவது, பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது என்பது குறித்து ஆலோசிக்கவும், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தொகுதி பங்கீடு செய்வதற்கும் பாஜக தேசிய தலைவர்கள் மார்ச் மாதம் சென்னைக்கு வர இருக்கின்றனர்.
அதன்படி தேசிய தலைவர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் மார்ச் முதல் அல்லது 2-வது வாரத்தில் சென்னைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடி சென்னைக்கு மார்ச் 4-ம் தேதி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க மோடி வருவார் என்றும், சென்னையில் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பார் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது, கூட்டணி குறித்து மோடி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டில் 3-வது முறையாக பிரதமர் மோடி அடுத்த மாதம் சென்னைக்கு வருவது உறுதியாகியுள்ளது.