முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள். படங்கள்: ம.பிரபு 
தமிழகம்

மக்களவை தேர்தலில் அதிமுகவை தேர்ந்தெடுக்க மக்கள் தயார்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் இபிஎஸ் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு தமிழ் வளர்ச்சித் துறை செயலர் இல.சுப்பிரமணியன் மற்றும் துறை அலுவலர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்திலிருந்து அதிமுக சார்பிலும், அதிமுக கூட்டணி சார்பிலும்தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள்தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்தகொள்கை கருத்துகளின் அடிப்படையில் செயல்படுவார்கள். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர ஜெயலலிதா வழியில்தொடர்ந்து அயராது பாடுபடுவார்கள் என்ற உறுதியை நான் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக் கிறேன்.

எங்களுக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பதவி பலமோ,திமுக அரசுக்கு இருப்பது போன்றஅதிகாரம் மற்றும் பண பலமோ இல்லை. எங்களிடம் இருப்பது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியும், 2 கோடியே 60 லட்சம்தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக களத்தில் நின்று உழைக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கை யும்தான்.

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் 37 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மக்களின் குரலை, மக்களின் பிரச்சினையை மக்களவையில் எதிரொலிக்கச் செய்தார்கள். இப்போது மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் மக்கள் பிரச்சினையை எழுப்பவில்லை.

மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் மக்களின் குரல் மக்களவையில் ஒலிக்கும். மக்களின் தேவைகளை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருவோம்.

அதிமுகவுக்கு நாட்டு மக்கள்தான் எஜமானர்கள். மக்களவைத் தேர்தலில் அதிமுகவைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி விட்டனர். களத்தில் எதிரிகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, விழாவில் பங்கேற்க வந்த பழனிசாமியை பேண்டுவாத்தியங்கள், செண்டை மேளம்முழங்க தொண்டர்கள், மகளிர் அணியினர் வரவேற்றனர்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன் மரியாதை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடுமாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சசிகலா தனது இல்லத்தில், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SCROLL FOR NEXT