கும்பகோணம்: கும்பகோணத்திலிருந்து நவக்கிரக தலங்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்து சேவையை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்றுகொடியசைத்து தொடங்கிவைத்தார்.
கும்பகோணத்திலிருந்து திங்களூர்(சந்திரன்), ஆலங்குடி(குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோயில் (சூரிய பகவான்),கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன்கோவில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி பகவான்) ஆகிய நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த சிறப்பு பேருந்தில் நவக்கிரக கோயில்களுக்கு செல்ல இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் இந்தப் பேருந்தில் பயணம் செய்ய, இந்தமாதம் முழுவதும் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
ரூ.750 கட்டணத்தில் நவக்கிரக கோயில்களுக்கு சென்றுவரும் வகையில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கான வரவேற்பைப் பொறுத்து, பேருந்துசேவை படிப்படியாக அதிகரிக்கப்படும். இதேபோல, அறுபடை வீடுகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.