கருணாஸ் 
தமிழகம்

நடிகைகளை தொடர்புபடுத்தி அவதூறு - 2 யூடியூபர்கள் மீது காவல் ஆணையரிடம் கருணாஸ் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: நடிகை திரிஷா மற்றும் நடிகைகளுடன் தொடர்பு படுத்தி அவதூறு பரப்புவதாக 2 யூடியூபர்கள் மீது நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அதிமுகவின் முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூ அண்மையில் கூவத்தூர் விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில், திரிஷா உள்ளிட்ட நடிகைகளையும், நடிகர் கருணாஸையும் அவதூறாக பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து ஏ.வி.ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ‘ஆன்லைன்’ மூலம் புகார் மனு அளித்திருந்தார்.

இதற்கிடையில், நடிகர் கருணாஸ் குறித்து 2 யூடியூபர்கள் பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த 2 யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ‘ஆன்லைன்’ மூலம் மற்றொரு புகார் மனுவை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை பற்றி 2 பேர் யூடியூப் சேனல்களில் பொய்யான தகவல்களையும், அவதூறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை விளம்பரத்துக்காக பரப்பி வருகிறார்கள். அதில் உண்மை இல்லை. எனினும், இந்த அவதூறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

எந்த வித ஆதாரமும் இன்றி என் மீது பரப்பிவரும் பொய்யான தகவலால் எனக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே இந்த 2 பேர் மீதும், யூடியூடிப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை பற்றிய அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT