தமிழகம்

“இபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்வோம்” - ஓபிஎஸ் உறுதி @ தேனி

செய்திப்பிரிவு

தேனி: பழனிசாமி நிறுத்தும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தேனி பங்களாமேட்டில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்கள் முத்துச்சாமி, காசிமாயன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: பழனிசாமி கட்சியில் எந்த தியாகமும் செய்யாமல் முதல்வராக வந்தவர். முதல்வரானதும் கட்சி விதிமுறைகளை மாற்றி அதிமுகவை கைப் பற்றி விட்டார். அதிமுகவை கபளீகரம் செய்த பழனிசாமியை அரசியலை விட்டே விரட்ட வேண்டும். அதற்காகத்தான் நான் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளேன். இந்தத் தேர்தலில் பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இந்தத் தேர்தலில் மட்டும் அல்ல. பழனிசாமி அணியினர் இனி எந்தத் தேர்தலிலுமே வெற்றிபெறக் கூடாது. பழனிசாமி இல்லாத அதிமுக தமிழகத்தில் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரிந்திருந்த கட்சியின் நண்பர்கள் தற்போது சந்தித்துள்ளோம். துரோகிகளிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே, சில வருத்தங்களை மறந்து ஒன்றிணைந்து இருக்கிறோம். பதவி, அதிகாரத்துக்காக நாங்கள் ஒன்று சேரவில்லை. அதிமுகவை மீட்டெடுக்கவே ஒன்று சேர்ந்திருக்கிறோம். தேர்தலுக்காக அல்ல. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

எந்தத் தேர்தலில் எப்போது போட்டியிட வேண்டும் என்று எனக்குத் தெரியும். பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் திமுகவை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் இந்த ஆட்சியிலும் ஊழல் அதிகரித்து விட்டது.தினமும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. திமுகவும், அதிமுகவும் மறைமுகக் கூட்டணி அமைத்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT