தமிழகம்

அதிமுக பொதுச்செயலராக ஜெ. 7-வது முறையாக தேர்வு: மக்களுக்காக உழைப்பதே லட்சியம் என்று பேச்சு

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலராக தொடர்ந்து 7-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 19-ம் தேதி வெளியானது. ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்காக மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்த அறிவிப்பை கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் அமைப்புச் செயலாளரும், தேர்தல் ஆணையருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனை வராலும் ஒருமனதாக கட்சியின் பொதுச்செயலராக முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார் என்று அறிவித்தார். இதற்கான சான்றிதழை தேர்தல் ஆணையர் விசாலாட்சி நெடுஞ்செழியனிடம் இருந்து முதல்வர் ஜெயலலிதா நேரில் பெற்றுக்கொண்டார். அவருக்கு அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

எம்ஜிஆரால் நிறுவப்பட்ட அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலராக மீண்டும் ஒருமன தாக என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். என்மீது நம்பிக்கை வைத்து ஒருமனதாக தேர்ந்தெடுத்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு பயணித்து, கட்சி அலுவலகத்தில் எனக்காக வேட்புமனு தாக்கல் செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வரலாற்று சாதனை

கடந்த 26 ஆண்டு காலமாக அதிமுக பொதுச்செயலராக செயலாற்றி வருகிறேன். இந்த காலகட்டத்தில் கட்சி பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. 1987-ல் எம்ஜிஆர் மறைந்தபோது கட்சி உறுப்பினர் களின் எண்ணிக்கை 17 லட்சமாக இருந்தது. 2014-ல் 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடைந்தோம். அதன் பின்னர் நடை பெற்ற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் அனைத்து மாநகராட்சியிலும் வெற்றி பெற்று, பெரும்பாலான நகராட்சி களிலும் வெற்றிபெற்று மகத்தான வரலாற்று சாதனை படைத்தோம்.

எதிரிகளையே காணவில்லை

2014 மக்களவை பொதுத்தேர்தலில், இனி யாரும் முறியடிக்க முடியாத வரலாற்று சாதனையை நாம் படைத்திருக்கிறோம். இன்று அரசியல் களத்தில் எதிரிகளையே காணவில்லை. நம்முடைய பகைவர் எங்கோ மறைந்தார். காண்கின்ற இடங்களில் எல்லாம் மக்கள்தான் தெரிகிறார்கள். தமிழக மக்கள் அடையாளம் கண்டுள்ள ஒரே அரசியல் இயக்கம் அதிமுகதான். இக்கட்சியின் ஒரே கொள்கை மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருக்க வேண்டும். கட்சியின் ஒரே லட்சியம் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்கள்பணியாற்றினால் இனி நம்மை வீழ்த்த எந்த சக்தியும் இல்லை. வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

SCROLL FOR NEXT