தமிழகம்

“விஜயதரணி செய்தது மாபெரும் துரோகம்” - ஜோதிமணி எம்.பி காட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: “தலைவர் ராகுல் காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம்” என கரூர் எம்.பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. நான் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருக்கிறேன். தற்போது சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி ஒரு ஜூனியருக்குதான் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நீண்ட நாட்களாக நான் எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நிறையப் பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன. ஏற்கெனவே இருந்த எம்.பி-யும், தற்போது இருக்கின்ற எம்.பி-யும் எந்த வேலையையும் செய்யவில்லை” என்று விஜயதரணி விளக்கமும் அளித்திருந்தார். | விரிவாக வாசிக்க > “எம்.பி சீட் மறுப்பு, காங்கிரஸில் பெண்கள் புறக்கணிப்பு...” - பாஜகவில் இணைந்த விஜயதரணி அடுக்கிய காரணங்கள்

இந்நிலையில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “தலைவர் ராகுல் காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம்தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT