தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 
தமிழகம்

“காங்கிரஸில் திறமை அடிப்படையில்தான் தலைமை வாய்ப்பு!” - செல்வப்பெருந்தகை நேர்காணல்

நிவேதா தனிமொழி

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அவரைச் சுற்று பல கேள்விகள் வட்டமடித்து வருகின்றன. அந்தக் கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். அதற்கு அவரின் பதில்கள் இந்த நேர்காணலில்...

கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் கடந்த 2022-ம் ஆண்டுடன் முடிவடைந்தும் அவர் தலைவராக தொடர்ந்தார். தேர்தல் நெருங்கும் வேளையில் அவரை மாற்றியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் சிக்கலா? உட்கட்சியில் சில மோதல் போக்கு காரணமாகவும் மாற்றம் நடந்திருப்பதாக சொல்கிறார்களே...

“தொகுதிப் பங்கீட்டு அளவிலும் சிக்கல் இல்லை. உட்கட்சியிலும் எந்தச் சிக்கலும் இல்லை. அழகிரியை, 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நியமித்தார்கள். என்னை 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாசம் 17-ம் தேதி நியமித்துள்ளார்கள். மூன்று நாட்கள் மட்டும்தான் வித்தியாசம். ஆனால், தேர்தல் நெருங்கும்போது மாற்றிவிட்டார்கள் எனக் கற்பனையாகப் பல வாதங்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும்போதுதான் அழகிரியும் புதிய தலைவராகப் பொறுபேற்றுக் கொண்டார். அப்போது எந்த விமர்சனமும் எழவில்லை. ஆனால், நான் நியமிக்கப்பட்டபோது எதிர்வாதங்கள் வைக்கப்படுகிறது. குறிப்பாக, அழகிரிக்கு திமுகவுடன் தொகுதிப் பங்கிடுவதில் பிரச்சினை எனப் பல தவறான வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. அவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது.”

ஆனால், பதவிக் காலம் நிறைவடைந்தும் இரண்டு ஆண்டுகளாக அவர் மாற்றப்படவில்லையே...

"அவர் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. அதனால், அவரை தலைவர் பதவியில் தொடர தலைமை அனுமதித்தது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் அவர் தலைவர் பொறுப்பில் நீடித்து விட்டார். அதன்பின் அடுத்தவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில் நான் தலைவராகியுள்ளேன்.”

மாற்றுக் கட்சியிலிருந்து வந்த உங்களுக்குத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகவே காங்கிரஸில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கவில்லை என வருத்தம் நிலவுகிறது. இது மேலும் கட்சிப் பணிகளில் தோய்வை ஏற்படுத்தாதா?

“அப்படி எந்த வருத்தமும் காங்கிரஸ் கட்சிக்குள் இல்லை. இதற்கு முன்பு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். அவர் காங்கிரஸ் இயக்கத்தில் மட்டுமே இருந்தவர் இல்லையே. அப்படியாக, காங்கிரஸில் உள்ள பல தலைவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான்.

குறிப்பாக, கர்நாடகாவில் சித்தராமையா, தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி என்ன மாநில முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும் மாற்று இயக்கத்திலிருந்து காங்கிரஸில் இணைந்தவர்கள். சமூக நீதி கொள்கைக்குப் பேர்போன கட்சி காங்கிரஸ். எனவே, பிற கட்சியில் இருந்து சேருபவர்களையும் மதிக்கிறது. அவர்களையும் தலைவர்களாக வளர்த்தெடுத்து உருவாக்குகிறது. காங்கிரஸில் திறமை அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கிறார்கள். அந்த வழியில்தான் நானும் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறேன்.”

நீங்கள் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது திமுகவுக்கு மிகவும் ஆதரவாக செயல்பட்டதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இப்போது தலைவராகிய பின் தொகுதி எண்ணிக்கையில் திமுகவுடன் சுமுகமாக செல்வீர்கள் என விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?

“அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் மாநில அளவிலான விவகாரங்களை எடுத்துச் சொல்வோம். அவர்கள் தரும் வழிகாட்டுதல்படிதான் எண்ணிக்கை, தொகுதிப் பங்கீடு குறித்துப் கட்சியிடன் பேசப்படும். ஒருவேளை, உடன்பாடு எட்டவில்லை என்றால், தலைமை நேரடியாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும். இதுதான் யதார்த்தம். சுமுகமாக நான் மட்டும் இதில் முடிவெடுத்துவிட முடியாது.”

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற சீனியர்கள் அவையில் இருந்தும், ராஜேஷ்குமாருக்கு பதவி வழங்கப்பட்டது ஏன்?

“ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பல ஆண்டுகளாகக் கட்சி தலைமைப் பொறுப்பில் இருந்தவர். குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சித் தலைவர் என திறமையும், அனுபவமும் வாய்ந்தவர். அவர் இளைஞர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்னும் நோக்கத்தில் சட்டமன்றத் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கு வழங்கப்பட்டது. அரசியலில் அனுபவம் வாய்ந்த அவர் எங்களை வழி நடத்துகிறார். இதில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.”

திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை இடங்களைக் கேட்கிறது. பேச்சுவார்த்தை நிலை குறித்து சொல்லுங்கள்...

“எங்களின் உயரமும் மதிப்பீடும் எங்களுக்குத் தெரியும். எனவே, அதற்கு ஏற்றார்போல தொகுதி எண்ணிக்கையைத் திமுகவிடம் முன்வைத்திருக்கிறோம். அவர்கள் கலந்தாலோசித்து விட்டு இறுதியான முடிவைச் சொல்வார்கள்.”

வேட்பாளர்களை வெல்லவைக்க உங்கள் திட்டம் என்ன?

“நவீனமான திட்டங்கள் அனைத்தையும் பின்பற்றி எம்பிக்களை வெல்ல வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். மக்களவைத் தேர்தலில் நூறு சதவீதம் காங்கிரஸ் வெற்றி பெறும். அதேநேரம், எங்களின் உழைப்பால் தோழமைக் கட்சிகளும் வெற்றி பெறச் செய்வோம்.”

கடந்த காலங்களில் பாஜகவுக்கு எதிராகப் போராட்டங்களைக் காங்கிரஸ் களத்தில் இறங்கி நடத்தவில்லை என்னும் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

“வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர இருக்கிறார். அவருக்கு கருப்புக் கொடி காண்பித்து கடலில் இறங்கி என் தலைமையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி போராடுவதைப் பார்ப்பீர்கள்.”

காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து?

“பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தும், இட ஒதுக்கீடு கூடாது என அவர் பேசியிருப்பது துரதிஷ்டவசமானது. அப்படி பேசி இருக்கக் கூடாது. அதில் எனக்கு வருத்தம்தான். ஆனால், அது கட்சியின் கருத்தல்ல. அவரின் தனிப்பட்ட கருத்து என்பதைப் பதிவு செய்கிறேன்.”

அனைத்து கட்சிகளுக்கும் தூணாக விழங்குவது ஐடி விங் தான். ஆனால், அதில் காங்கிரஸ் முடங்கியிருக்கிறதே...

“நீங்கள் சொல்வது மிகச் சரியானது. நேற்றிலிருந்து அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. கர்நாடகாவில் இருந்து பாவனா, கேரளாவிலிருந்து முன்னா ஆகியோர் எங்கள் கட்சியில் இணைந்து ஐடி விங் பொறுப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அதற்கான பணிகளைத் துரிதமாக எடுத்து வருகிறோம். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அதன் விளைவு என்ன என்பது தெரியும்.”

நடப்பு எம்பிக்கள் கார்த்திச் சிதம்பரம், ஜோதிமணி, திருநாவுக்கரசருக்கு எதிரான மனநிலைதான் காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கிறது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?

“அகில இந்திய தலைமைதான் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது. எனவே, அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை.”

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை முன்வைத்து இண்டியா கூட்டணியிலில் இருந்து கட்சிகள் விலகுகின்றன. கூட்டணியை உருவாக்கிய காங்கிரஸே சிதைக்கலாமா?

“நிதீஷ்குமார் சுயநலம் காரணமாக இண்டியா கூட்டணியில் இருந்து விலகினார். அவருக்கு மிரட்டல் இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். அதேபோல், கூட்டணிக்குள் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் மீறி அவர் முதல்வராகத் தொடர எத்தனித்தார். இதனால், ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், யாருடன் இனி உறவு வைக்க மாட்டேன் எனச் சொல்லி இண்டியா கூட்டணிக்குள் இணைந்தாரோ, மீண்டும் அவர்களுடன் (பாஜக) அடைக்கலமாகியிருக்கிறார்.

இந்த மக்களவைத் தேர்தல்தான் நிதிஷ்குமாரின் இறுதித் தேர்தலாக இருக்கும் என்பதை பிஹார் மக்கள் உணர்த்துவார்கள். எனவே, சுயநலத்துக்காக அவர் எடுத்த முடிவுக்கு காங்கிரஸ் மீது எப்படி குற்றச்சாட்டை வைக்க முடியும்.

தவிர, டெல்லியில் ஆம் ஆத்மியுடனும் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியுடனும் தொகுதிப் பங்கீடுகள் நிறைவடைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜியுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைக் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. எனவே, ஒவ்வொரு மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை காங்கிரஸ் சரியாகக் கையாண்டு வருகிறது. தமிழகத்திலும் விரைவில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்படும்.”

SCROLL FOR NEXT