கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் காந்திமாநகர் பகுதியில் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள். படங்கள்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்துக்காக காத்திருக்கும் கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் தினமும் 1,100 டன் குப்பை சேகரமாகிறது. மாநகராட்சியில் நிரந்தர அடிப்படையில் 2,200, ஒப்பந்த அடிப்படையில் 4,200 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். சாலை, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்தல், வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரித்து, தரம் பிரித்தல், நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.

இந்நிலையில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியத்தை தங்களுக்கு வழங்க வேண்டுமென தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது: 480 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளரை நிரந்தரம் செய்ய வேண்டுமென 1981-ல் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதேபோல, நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தால், அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. மருத்துவக் காப்பீட்டுத் தொகை பிடிக்கப்பட்டாலும், அதற்கான அட்டை வழங்கப்படுவதில்லை.

ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் ரூ.15 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மாதந்தோறும் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு தரமான கையுறை, ஷூ வழங்கப்படுவதில்லை.

கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் காந்தி மாநகர் பகுதியில் குப்பையை
அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன் |

இஎஸ்ஐ, பிஎஃப் தொகை பிடித்தம் செய்தாலும், அவர்களது கணக்கில் வரவு வைப்பதில்லை. சரிவர வார விடுமுறையும் வழங்குவதில்லை. ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது, என்றார்.

தூய்மைப் பணியாளர் குமார் கூறும்போது, ‘‘குப்பை சேகரிப்புக்கான தள்ளுவண்டிகள் பழுதடைந்துள்ளன. எங்கள் சொந்த செலவில் அவற்றைச் சீரமைத்துப் பயன்படுத்துகிறோம்” என்றார்.

தூய்மைப் பணியாளர் ஜீவா மகேந்திரன் கூறும்போது, ‘‘தினமும் காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை, 4 கிலோமீட்டருக்கு மேல் சென்று குப்பை சேகரிக்கிறோம். அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கினால், சிரமமின்றி குடும்பத்தை நடத்த முடியும்” என்றார்.

மாநகராட்சி சுகாதாரத் துறை உயரதிகாரி கூறும்போது, ‘‘கோவை மாநகரில், 100 லாரிகள், 209 சிறிய வேன்கள், 1,540 தள்ளுவண்டிகள் குப்பை சேகரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, ஷூ உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. தற்காலிக பணியாளர்களுக்கு, அவர்களை தேர்வு செய்த ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. மாத ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்கிறோம். குப்பை சேகரிப்பு வாகனங்கள் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வருகின்றன’’ என்றார்.

SCROLL FOR NEXT