தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வெ.கி.சம்பத்தின் 47-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: விவசாயிகளின் ஆதரவு தேவை. ஆனால் அவர்களுக்கான உரிமையை மோடி மறுக்கிறார். அதனால் போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதிலிருந்து போடி தப்ப முடியாது. தமிழகத்தில் பாஜக 3 சதவீத வாக்குகள் கூட பெற வாய்ப்பில்லை. கட்சியில் சிறப்பாக செயல்படாத தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கு பிறகு மாற்றப்படுவார்கள்.
மக்களவை தேர்தலில் பாஜகவினரின் கருத்துகள், செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் சமூக வலைத்தள நிர்வாகிகளுடன் நானும், மேலிட பார்வையாளர் அஜோய்குமாரும் ஆலோசனை நடத்தினோம். இதில் சமூக வலைத்தள பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது, அதில் மோடி அளித்த வாக்குறுதிகள், அதை செயல்படுத்தாதது, விலை உயர்வு தொடர்பாக மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.