தமிழகம்

தமிழகத்துக்கு மார்ச் முதல் வாரமும் பிரதமர் மோடி வருகை: அண்ணாமலை தகவல்

செய்திப்பிரிவு

திருப்பூர்: பல்லடம் அருகே மாதப்பூரில் வரும் 27-ம் தேதி பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும்போது, ‘‘பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் நடைபெற உள்ள ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா மாநாடு, எழுச்சி விழாவாக இருக்கும். 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு, தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், இந்த பொதுக்கூட்டத்துக்கு பிறகு முக்கிய அரசியல் மாற்றம் நிகழும்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வர உள்ளனர். தேசியம் மற்றும் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்களை கொண்ட கோவை மக்களவைத் தொகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ‘என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் 27, 28-ம் தேதிகளில் மட்டுமின்றி, மார்ச் முதல் வாரமும் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி மீண்டும் வருகிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் பிரதமர் தொடர்ச்சியாக தமிழ்நாடுக்கு வருவார்’’ என்றார்.

இந்த ஆய்வின்போது, மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட தலைவர் செந்தில்வேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடியை வரவேற்று, திருப்பூர் செட்டிபாளையம் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ‘வி லவ் மோடி’ என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து நின்றனர்.

SCROLL FOR NEXT