தமிழகம்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகாரையடுத்து மும்பை நிறுவனம் சார்ந்த இடங்களில் அமலாக்க துறை சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகாரையடுத்து, சென்னையில் மும்பை நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் வர்த்தக நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் சென்னை, திருச்சி, டெல்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளுடனும் அந்நிறுவனம் வர்த்தகம் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த நிறுவனம், ஒரு விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருவதாகத் தெரிகிறது.

10-க்கும் மேற்பட்ட இடங்கள்: இந்நிலையில், நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அந்நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று சென்னையில் அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதன்படி, எழும்பூர், திருவிக நகர், பெரம்பூர், பழவந்தாங்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.

திருவிக நகரில் இந்நிறுவன அதிகாரிகளான மார்டின், ஜான்சன், டேனியல் செல்வக்குமார் ஆகியோரது வீடுகளிலும், பழவந்தாங்கலில் ஹேலன் சாமுவேல், வெங்கடேஷ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல், எழும்பூரில் உள்ள அந்நிறுவனத்தின் கிளை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. சோதனை குறித்த எந்த விவரங்களையும் அமலாக்கத் துறையினர் தெரிவிக்கவில்லை. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்களும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT