சென்னை: பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் வசதிக்காக சாலையோரங்களில் பாதசாரிகளுக்கென்று தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படி அமைக்கப்பட்டுள்ள பாதைகள் தற்போது பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாதசாரிகளுக்கான வழித்தடம் சாலையோர கடைகளாகவும், வாகன நிறுத்தும் இடங்களாகவும் மாறி வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க சென்னையில் அண்மைக் காலமாக பாதசாரிகளுக்கான பாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் நுழைந்து அபாயகரமாகச் செல்கின்றனர். இதனால், அவர்களது உயிருக்கு மட்டும் அல்லாமல் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், பாதசாரிகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதோடு, கூடவே மழைநீர் வடிகால்வாயும் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வடிகால்வாய் மேலே ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குகின்றனர்.
இதை போக்குவரத்து விதிமீறல் என எச்சரிக்கும் போக்குவரத்து போலீஸார், இதுபோன்ற சாகசத்தை வாகன ஓட்டிகள் தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஒருவரிடம் கேட்டபோது, ``எந்த வகை வாகனங்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இயக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
வாகன ஓட்டிகள் விதிமீறல்களில் ஈடுபடுவதால் விபத்துமற்றும் விபத்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அனைத்துதரப்பினரும் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்புடன் கடைபிடித்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவேண்டும்'' என்றார்.
இதுகுறித்து இருசக்கர வாகன ஓட்டியான தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அண்ணா சாலையைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞரிடம் கேட்டபோது, ``சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மெட்ரோ ரயில் பணியும் பல இடங்களில் நடைபெறுகிறது. இதனால்,பல சாலைகள் சுருங்கி அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கும்,இன்னும் சில காரணங்களுக்காகவும் செல்ல வேண்டும். எனவே,வேறு வழியின்றி பாதசாரிகளின் வழித்தடம் வழியாகச் செல்கிறோம். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தால் நாங்கள் பாதசாரிகளின் வழித்தடத்தைப் பயன்படுத்தும் நிலை ஏற்படாது'' என்றார்.
சாலை சுருங்கினாலும், வாகனநெரிசல் ஏற்பட்டாலும், அவசர நிலை என்றாலும் அனைத்து தரப்பினரும் சாலை விதிகளை மதித்துப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது.