தென்காசி: சங்கரன்கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின், ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நேற்று இரவு நடைபெற்றது. சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு தொடங்கிய யாத்திரை மெயின் ரோடு வழியாக நகைக்கடை பஜார், கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி வழியாக வந்து வடக்கு ரத வீதியில் முடிவடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
வருகிற 27-ம் தேதி பல்லடத்தில் நடைபெறும் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். 2024-ல் மிகப்பெரிய புரட்சிக்கு மக்கள் தயாராகிக்கொண்டு உள்ளனர். இந்தியா முழுவதும் மோடியின் புகழ் பரவியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு உள்ள பகுதிகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.
மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். எதிரணியினர் தெறித்து ஓடுகின்றனர். மோடியை எதிர்க்கும் துணிவு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.
மோடிக்கு எதிராக எந்த ஆயுதமும் வேலை செய்ய முடியவில்லை. தென்காசியில் வளர்ச்சியை கொண்டுவர வேண்டும். தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும். லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்த ஆண்டு இலவச வேட்டி வழங்கும் திட்டத்தில் ஊழல் செய்துள்ளனர். 88 சதவீத பாலியெஸ்டரும், 12 சதவீத பருத்தியும் மட்டுமே வேட்டியில் உள்ளது. இதன் மூலம் 66 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளேன்.
ஊழல் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் வேட்டையாடப் போகிறோம். கெட்டவர்கள் கெட்டது செய்யும்போது, அதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்கும் நல்லவர்களால் இந்த சமுதாயம் கெட்டுக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
யாத்திரையில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.