வேலூர்: ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று தெரியாதவர்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கிறார்கள் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டினார்.
2024 மக்களவைத் தேர்தலை யொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மக்களவை உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன், திமுக அயலக அணி செயலாளர் அப்துல்லா, திமுக மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தமிழ்நாட்டு மக்களின் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் முக்கிய நகரங்களில் பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டு வருகின்றனர்.
அதன்படி, வேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்புக்கூட்டம் மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பரிந்துரைகளை அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கனிமொழி பேசும்போது, ‘‘திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என தலைவர் கருணாநிதி காலம் முதல் தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரை தொடர்கிறது. மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, அந்த கருத்துக்களை பதிவு செய்து தேர்தல் அறிக்கையாக உருவாக்கப்பட்டு வருகிறது.
உங்களுடைய கோரிக்கைகள், உங்களுடைய கருத்துக்கள், நீங்கள் எங்களுக்கு கொடுக்கக் கூடிய அறிவுரைகளை முதலமைச்சரிடம் கலந்துரையாடி தேர்தல் அறிக்கையை உருவாக்க இருக்கிறோம்’’ என்றார்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி கூறும்போது, ‘‘திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக அண்ணாமலை விமர்சனம் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி, இரண்டு தேர்தலுக்கு முன்பு அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரும் என கூறினார். அதற்காக, இன்றளவும் காத்துக்கொண்டிருக்கிறோம். அனைவரின் வங்கிக் கணக்கில் அந்த பணத்தை போட்டதும் அண்ணாமலை மற்றவர்களை விமர்சிக்கும் உரிமையை எடுத்துக்கொள்ளட்டும்.
தவறான ஆட்சியை நடத்தி தமிழ்நாட்டை எல்லா இடத்திலும் பின்னோக்கி நகரக்கூடிய நிலையில் வைத்துச் சென்றவர்தான் பழனிசாமி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் என்ற நிலை உருவாகிஉள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் முனைவோர், அதிகப்படியான முதலீடு செய்வது வேலைவாய்ப்புகள் என அனைத்திலும் திமுக ஆட்சியில்தான் சாத்தியமானது.
தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் அளவுக்கு அவர்களுக்கு தெரியாது. ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என தெரிந்தால்தானே தேர்தல் அறிக்கை பற்றி எல்லாம் புரியும்’’ என்றார்.
இதில், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தேவராஜி, வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமலு விஜயன், வில்வநாதன், திமுக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.