திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி 4-வது நாளாக நேற்றும் நீட்டித்த உண்ணாவிரதப் போராட்ட களத்தில், காவல் துறையினரின் நெருக்கடியால் விவசாயிகள் தங்களது யுக்தியை மாற்றி சுழற்சி முறையில் பங்கேற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த 7 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு, கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நிலமற்றவர்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என கருத்து தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நிலம் உள்ளதை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலக தயாரா? என கேள்வி எழுப்பி போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 20-ம் தேதி சென்னையில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க சென்ற விவசாயிகளை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால், மேல்மா கூட்டுச்சாலையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். உண்ணாவிரதம் இருந்த 10 விவசாயிகளின் உடல்நலன் பாதிக்கப்பட்டதாக கூறி, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.
காவல் துறையினரின் நெருக் கடியால் தொடர் உண்ணாவிரதப் போராட்ட யுக்தியை விவசாயிகள் மாற்றிக் கொண்டுள்ளனர். சுழற்சி முறையில் விவசாயிகள் பங்கேற்க தொடங்கி உள்ளனர். முதற்கட்ட போராட்டத்தில் பங்கேற்ற 10 விவ சாயிகள், தங்களது உண்ணா விரதத்தை நேற்று முன்தினம் கைவிட்டனர்.
இதையடுத்து 2-வது கட்டமாக இளநீர்குன்றம் சாரதி (28), நர்மாப்பள்ளம் சரவணன் (37), கருணாகரன் (26), குறும்பூர் பரமசிவம்(60), சுந்தர வடிவேலு(45), மேல்மா காசி(51), நர்மாப்பள்ளம் எல்லப்பன் மனைவி கல்யாணி(70), ரத்தினம் மனைவி செந்தாமரை(55), இளநீர்குன்றம் பெருமாள் மனைவி பேபி(60) என 3 மூதாட்டிகள் உட்பட 9 பேர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.