தருமபுரி: தருமபுரியில் பாஜக சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் மக்களுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. வடசென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 39 மக்களவைத் தொகுதிகளிலும் தாமரைச் சின்னத்தில் களம் காண விரும்புகிறோம். இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும் என்ற எங்களது எண்ணங்களை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினரும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இதை சில கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் தவறுகளிலிருந்து இந்தியாவை பிரதமர் மோடி சீர்திருத்தினார். இதையடுத்து 2019 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா பொருளாதாரத்தில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் இந்தியா வேகமாக வளரும் சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என தமிழக மக்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டங்களில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடும் கட்சியினரை காணலாம். இவ்வாறு அவர் பேசினார்.