பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

காவல் துறை நெருக்கடி: தூத்துக்குடி பனைத் தொழிலாளர்கள் அச்சம்

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: பதநீர் சீஸன் தொடங்காத நிலையில், காவல் துறை நெருக்கடி கொடுத்து வருவதால் தொழிலைச் செய்ய முடியவில்லை என, பனைத் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், குளத்தூர், விளாத்தி குளம் பகுதி பெரியசாமிபுரம், சித்தவ நாயக்கன்பட்டி, வேடப்பட்டி, அயன்வடலாபுரம், தாப்பாத்தி, கருப்பூர் போன்ற பகுதிகளில் பனைத்தொழில் நடைபெற்று வருகிறது. பனைமரத்தில் இருந்துபதநீர் இறக்குதல், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லு கருப்பட்டி தயாரித்தல் ஆகியவை முக்கிய தொழிலாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை 6 மாதங்களுக்கு பதநீர் சீஸன் காலமாகும்.

இத்தொழிலில் உள்ள பல்வேறு சிரமங்கள் காரணமாக, வெகு சில குடும்பங்களே பனைத் தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர். நடப்பாண்டு சீஸன் முறையாகதொடங்காத நிலையில், காவல்துறையினர் பனையேறும் தொழிலாளர்களிடம் பணம் கேட்டும், பதநீர் கேட்டும், கருப்பட்டி கேட்டும்தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: பனைத்தொழில் ஆண்டுக் காண்டு நலிவடைந்து வருகிறது. பனைத் தொழிலை பாதுகாக்கவும், கோடிக் கணக்கான பனை விதைகளை நடுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பனை மரத்தில் தினம் 3 முறை பாளை சீவவில்லையென்றால் உலர்ந்துவிடும். அதில் பானம் சுரக்காது. ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு சுமார் 50 மரங்கள் ஏறுவது வழக்கம்.

இந்தாண்டு சீஸன் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், இப்போதே காவல்துறையினர் பனையேறும் தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். காவல்நிலையத்தில் வெகுநேரம்காக்க வைக்கின்றனர். கள் விற்பதாக வழக்குப் பதிவோம் என மிரட்டி வருகின்றனர். இதனால் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர். பனைத் தொழில் செய்வோருக்கு கருப்பட்டி, கற்கண்டு, சில்லுக்கருப்பட்டி தயாரிப்பு செய்ய அரசு மானியத்துடன் கடனுதவி செய்வதாக தெரிவித்துள்ளது.

ஆனால், அதுவிளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்டிருக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால் புதூர் மேற்கு வட்டார பனைத் தொழில் புரிவோர் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிபந்தனையைத் தளர்த்த வேண்டும். மேலும், பனைத் தொழில் புரியும் குடும்பங்களை நிம்மதியாக தொழில் செய்ய விட வேண்டும், பனைத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT