சென்னை: ரயில்வே போலீஸ் நவீனபடுத்தப்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ரயில்வே துறை இந்த நாட்டை இணைக்கும் பாலம். எப்படி ஆன்மிகம் இந்நாட்டை இணைக்கிறதோ அதுபோல ரயில்வேயும் அஞ்சலகமும் தேசத்தின் எல்லா பகுதிகளில் உள்ள மக்களை ஒருங்கிணைக்கிறது. ரயில்வே பயணம் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் மக்கள் கருதுகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் ரயில்வே துறை வளர்ச்சியில் பல உச்சங்களை தொட்டுள்ளது.
ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது மக்களை திசைத் திருப்ப ரயில்வே ஸ்டேஷன்களை சமூக விரோதிகள் குறிவைத்து தாக்கி வருவதை காண்கிறோம். அதுபோல கடந்த இரு மாதங்களாக வந்தே பாரத் ரயில் மீது கல்லெறிவது, ரயில்வே லைனில் எதாவது பொருட்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்வதை பார்க்கிறோம். தற்போது ரயிலில் வெடி மருந்து பொருட்கள் கடத்தி வந்ததும் செய்தியாகியுள்ளன. எனவே ரயில் பயண பாதுகாப்பை உறுதி செய்ய தக்க நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
மேலும், ரயில்கள் மீது தாக்குதல்களை நடத்தும் சமூக விரோதிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க ரயில்வே போலீஸ் நவீனப்படுத்தப்பட வேண்டும். மேலும், ரயில்வே போலீசாருக்கு அதிக அதிகாரங்களை அளிக்கவும் சட்டம் இயற்ற வேண்டும்.
விமான பயணங்கள் போல ரயில்வே பயணத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ரயில் மறியல் என்ற பெயரில் ரயில்வே போக்குவரத்தை தடை செய்வதை தடுக்க வேண்டும். விமான நிலையங்கள் போல உயர் பாதுகாப்பு பகுதியாக ரயில் நிலையங்களும் அறிவிக்கப்பட வேண்டும். எனவே மத்திய அரசு ரயில்வே பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.