தமிழகம்

“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” - முதல்வர் @ தமிழக சட்டப்பேரவை

செய்திப்பிரிவு

சென்னை: “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று பாமக உறுப்பினர்கள் இன்று (வியாழக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் குரல் கொடுத்தனர். ஆனால், ஆளுநர் உரையில் இதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி இதுகுறித்து பேரவையில் விவாதிக்க மறுக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து பாமக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு பிரச்சினை பண்ண வேண்டும் என்றே கூச்சல் எழுப்புகிறீர்கள். ஏற்கெனவே ஆளுநர் உரையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கணக்கெடுத்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். நீங்கள் அரசியலுக்காகவோ அல்லது எதற்காகவோ மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள். மாநில அரசு எடுக்க வேண்டிய அவசியமில்லை.

மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தினாலும், அதனை நடைமுறைபடுத்துவதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த அரசியலமைப்பு சட்டப்படி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றிய அரசு மட்டும்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும். முதல்வர் ஸ்டாலினும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். உங்களின் கருத்தோடு ஒத்த கருத்தாக முதல்வரும், இந்த அரசும் உள்ளது.” என்றார்.

பின்பு விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், “சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஏற்கனவே இந்த அவையில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டிலும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி, வேல்முருகன், ஜி.கே.மணி போன்றோர் இதுகுறித்து என்னிடம் நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்கள். அப்போதே இதுகுறித்து விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிராளிகள் அல்ல. உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT