தமிழகம்

தமிழகத்தில் ரூ.2,080 கோடியில் பள்ளி கட்டிடங்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடுஏற்படாத வகையில் புதிதாகவளைவு திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் இதுவரை ரூ.2,080கோடிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் விவரம்:

எழிலன் (திமுக): நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் உள்ளிட்டோரை நியமிப்பதால், அவர்கள் நிரந்தரமாக பணியில் இருப்பதில்லை. சுகாதாரத் துறைபோல மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகத் துறைக்கு தனியாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். சுகாதாரத் துறைபோல, பணி நீட்டிப்பு முறையில் மருத்துவர்கள் தொடர்ந்து பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.வேல்முருகன் (தவாக): சென்னையில் நான் வசிக்கும் பகுதியில் மாதம் 2 லாரி தண்ணீர் வாங்குகிறேன். எங்கள் பகுதியில் தண்ணீர்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் நேரு: சென்னையில் குடிநீர் பிரச்சினை இல்லை. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, தேர்வாய்க்கண்டிகை, வீராணம் திட்டங்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டும் தினசரி 250 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. அங்குதேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடத்தில் குழாய் பதிக்கும் பணிகள் 8 ஆண்டுகளாக முடிக்கப்படவில்லை. இன்னும் 7 மாதங்களில் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். பணி முடிந்துவிட்டால் செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டும் தினசரி 500 மில்லியன் லிட்டர் நீர் வழங்க முடியும்.

இதுதவிர, புதிதாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் வரும் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் சென்னை மாநகருக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்க தற்போது உள்ள 5-6 திட்டங்களை இணைத்து புதிதாக வளைவு திட்டம் அமைக்க முடிவு எடுத்துள்ளோம். இதன்மூலம், ஒரு திட்டத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டாலும், மற்றொரு திட்டம் மூலம் தண்ணீர் வழங்க முடியும்.

தி.சதன் திருமலைக்குமார் (மதிமுக): பள்ளிக் கட்டிட கட்டுமான பணிகள் எந்த அளவில் உள்ளன?

அமைச்சர் அன்பில் மகேஸ்: பேராசிரியர் அன்பழகன் பள்ளிமேம்பாட்டு திட்டத்தில் ரூ.7,500 கோடி ஒதுக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் கழிவறைகள் உட்பட 18ஆயிரம் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை 3,601 வகுப்பறைகள், 21 ஆய்வகங்கள், 154 யூனிட் கழிப்பறைகள், 700 மீட்டர் நீளத்துக்கு சுற்றுச்சுவர், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட 5 நூலகங்கள் என மொத்தம் ரூ.2,080 கோடிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

3,600 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 191 கழிப்பறைகள், 2.1 கி.மீ. நீளத்துக்கு சுற்றுச்சுவர், தலா 5 மாணவர், மாணவியர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பழமையான கட்டிடங்களை பொருத்தவரை, 100 ஆண்டுகள் கடந்த 5 பள்ளி கட்டிடங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதேபோல, இந்த முறையும் 5 பள்ளிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தாய்மொழி தின உறுதிமொழி: உலக தாய்மொழி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பேரவையில் கேள்விநேரம் முடிந்ததும், தாய்மொழிதினம் தொடர்பான உறுதிமொழியை பேரவைத் தலைவர்அப்பாவு வாசித்தார். ‘‘எங்கும் தமிழ்எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்றநடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைப்போம். அனைத்துஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழில் பெயர்சூட்ட பரப்புரை செய்வோம். இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

SCROLL FOR NEXT