பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் விசாரணை முழுமையாக லஞ்ச ஒழிப்புத் துறையின் கைக்குச் சென்றுள்ளதால், துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட சுமார் 76 பணியிடங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகின்றன. முறைகேடு உறுதியானால் இப்பணியிடங்கள் அனைத்தும் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பணி வாய்ப்பு பெற்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டிருந்தாலும், சமீபத்திய பணி நியமன முறைகேடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரின் தகுதி காண் பருவத்தை நிறைவு செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதியும், அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உடந்தையாக இருந்த பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மைய இயக்குநர் (பொறுப்பு) மதிவாணன் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். பணிநியமன முறைகேட்டில் துணைவேந்தருக்கு பக்கபலமாக செயல்பட்டதாக அவரது மனைவி, குடும்பத்தினர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரையும் வழக்கில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர், உதவி, இணைப் பேராசிரியர் என பல்கலைக்கழகத்தின் பல துறைகளுக்கும், உறுப்புக் கல்லூரிகளுக்கும் 80 பணியிடங்களைக் கடந்த 2016-ம் ஆண்டு துணைவேந்தர் கணபதி நிரப்பினார். அதில், தொடங்கிய லஞ்ச முறைகேடு புகாரே, அவரது கைது வரை நீண்டுள்ளது. இதில் ஒவ்வொரு பணியிடத்துக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.66 லட்சம் வரை பல்வேறு படிநிலைகளில் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், பகிரங்க ஏலம் போல பேராசிரியர் பணியிடங்கள் விற்கப்பட்டதாகவும் வாய்ப்பு இழந்தவர்கள் கூறுகின்றனர்.
எனவே, இதில் பணி வாய்ப்பு பெற்ற ஊழியர்கள் அனைவரும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியாக துணைவேந்தர் மீது ஆளுநரும், முறைகேடாக பணியமர்த்தப்பட்டவர்கள் மீது உயர்கல்வித் துறையினரும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையை தன்னிச்சையாக நடத்த அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘துணைவேந்தர் மீதான நடவடிக்கை ஆளுநர் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதேசமயம் ஊழியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு இருப்பதாக புகார்கள் வந்ததால், ஏற்கெனவே அதன் மீது விசாரணை தொடங்கிவிட்டது. உறுதி செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
துணைவேந்தர் கணபதி லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் தொகை அனைத்தையும் மீட்கும் முயற்சி ஒருபுறமும், மறுபுறம் அவரை சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தவுடன், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், துணைவேந்தர் கணபதி கைதாகி 2 நாட்கள் ஆன நிலையிலும் அவர் மீதான நடவடிக்கை தாமதமாவதாக கூறப்படுகிறது.
உயர்கல்வித் துறை செயலர் சுனில்பாலிவால் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘பணிக்காலத்தில் இதுபோல கைதாகி 48 மணி நேரம் நீதிமன்றக் காவலில் இருந்தால் துணைவேந்தர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விரிவான அறிக்கை அடிப்படையில் ஆளுநர் அதற்கான நடவடிக்கை எடுப்பார். ஆனால், உயர்கல்வித் துறையை பொறுத்தவரை, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் இருந்து எந்த அறிக்கையும் பெறப்படவில்லை. பணிநியமன முறைகேடு புகார் குறித்து முழுவதும் போலீஸாரே விசாரிப்பதால், உயர்கல்வித் துறை விசாரணை தேவைப்படவில்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்டால், அதன்பிறகு கன்வீனர் கமிட்டி அமைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஓரிரு வாரங்கள் ஆகும்’ என்றார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கேட்டபோது, ‘துணைவேந்தர் கணபதி, தர்மராஜ், மதிவாணன் ஆகியோரது செல்போன் அழைப்பு பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆய்வின்போது கணபதியின் வீட்டில் உடைகள், உடைமைகள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. ரசாயனம் தடவிய ரூபாய் தாள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். விசாரணை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். குற்றப்பத்திரிகையில் துணைவேந்தர் மனைவி உள்ளிட்டோர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணி நியமன முறைகேடு குறித்து கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் விரிவான விசாரணை நடக்கிறது. புதிதாக பணியில் சேர்ந்தவர்களும் விசாரிக்கப்படுவார்கள்’ என்றனர்.
பணி நியமன முறைகேடு, துணைவேந்தர் மீதான ஊழல் புகார் அனைத்தும் 4 மாதங்களுக்கு முன்பே ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, ‘உண்மைதான், ஆளுநர் பொறுப்பேற்ற உடனேயே இந்த புகார் அவரிடம் கொண்டு செல்லப்பட்டது. கோவையில் அவர் கள ஆய்வில் ஈடுபட்டபோது, இந்த புகார் குறித்து விசாரித்தார். அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனியும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
நிலைமை இவ்வாறு இருக்க, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பதிவாளர் (பொறுப்பு) வனிதா தலைமையில் சிண்டிகேட்டில் உள்ள பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்ட திடீர் கூட்டம் நடைபெற்றது. பதிவாளர் வனிதாவிடம் கேட்டபோது, ‘லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனை, கைது நடவடிக்கை எதுவுமே எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. 2 நாட்கள் துணைவேந்தர் இல்லை என்பதால் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. உயர்கல்வித் துறை அறிவுறுத்தல் பேரில் நிர்வாகரீதியான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
நிர்வாகப் பணிகள் முடங்கியிருக்கும் சூழலில், புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் கொடுத்த பணத்தையும், கிடைத்த வேலையையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் ஆளுநரின் உத்தரவைப் பொறுத்தே தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.