சென்னை: தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் தலையீடு செய்வதற்கு கூடுதல் அமைப்புகளை கட்டமைக்க வேண்டும் என்று தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், மாநிலக் குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலத் தலைவருமான இரா.நல்லகண்ணு தலைமை வகித்தார். கூட்டத்தில், கே.சுப்ரமணியன் எழுதிய‘பில்கீஸ் பானு’ ( நீதியைத் தேடி நீண்ட பயணம் ) என்ற நூல் வெளியிடப்பட்டது.
இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்து, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசிய தாவது: தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் எனத் தொடங்கி இருந்தாலும், தலித் உரிமைகள் இயக்கத்துடனே இருக்கிறோம். தலித்உரிமைகள் இயக்கம் என்பது தலித் மக்கள் மீதான அடக்குமுறையை எதிர்ப்பதில், தலித் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதில், அரசியல் பகிர்வில் அடங்கியுள்ளது. அரசியல் அதிகாரம் இல்லாமல் வெறும் அடக்கமுறையை எதிர்ப்பது நோக்கம் அல்ல.
அனுசரிப்பு கலாச்சாரம்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். இது தான் நமது நோக்கம்.தலித் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருக்கிறது. இவற்றில் தலையீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. எனவே, தலித் மக்கள் மீதான அடக்கு முறையில் தலையீடுகள் செய்வதற்கு கூடுதல் அமைப்புகளை கட்டமைக்க வேண்டும். எங்கு அமைப்புகள் வலுவாக இருக்கிறதோ அங்கு தலையீடுகள் செய்யலாம்.
எனவே, அமைப்புகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஒரு மதம், பிற மதத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை. அதேநேரம் பிற மதத்தை மதிக்க வேண்டும். இந்த அனுசரிப்பு கலாச்சாரம் தான் பன் முகத்தின் ஆழம். இது, மதச்சார்பின்மையின் ஆழமாகும். இதை அடித்து நொறுக்குவதற்கு பாஜக முயல்கிறது. இதுதான் பேராபத்து. இவ்வாறு அவர் பேசினார்.
அகில இந்திய தலித் உரிமைகள் இயக்க தலைவர் ராம மூர்த்தி, அகில இந்திய தலித் உரிமைகள் இயக்க தேசிய குழு உறுப்பினர் உதய குமார் உள்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் தலித் மக்கள், மலை வாழ் மக்கள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதை தடுக்கத் தவறிய மத்திய பாஜக அரசை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.