திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கா மல் அதற்கு முன்பே கட்சிகள் களமிறங்கி தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதி தவிர, திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. வேடசந்தூர் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியில் சேர்ந்துள்ளது. திண்டுக்கல் தொகுதியில் திமுக, பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்பே தொடங்கி விட்டன.
திமுக: திண்டுக்கல் தொகுதியில், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பொதுக் கூட்டத்தை நடத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் பேசினார். கூட்டத்தை காட்ட ஏராளமான பொது மக்களை திமுக நிர்வாகிகள் திரட்டி அழைத்து வந்திருந்தனர். மேலும் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் திட்டங்களால் பயன் அடைந்துள்ளீர்களா என ஆட்சியின் நிறை, குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.
திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் வார் ரூம் ( உதவி மையம் ) அமைக்கப்பட்டுள்ளது. திமுகவினரின் செயல்பாடுகள் மட்டுமல்லாது எதிர்க் கட்சியினரின் செயல்பாடுகளையும் கண்காணித்து அவர்களின் குற்றச் சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த உதவி மையம் செயல்படும் என கட்சி நிர்வாகிகள் கூறினர்.
அமைச்சர்கள் சுறுசுறுப்பு: திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கர பாணி ஆகிய இருவரும் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தொகுதிக்குள் கிராம வாரியாகச் சென்று அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றுவது எனச் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த முறை, திண்டுக்கல் தொகுதி அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை கூட்டணியில் பாமக இடம் பெறுமா எனத் தெரியவில்லை. கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம், பாமக தோற்றது. அதனால் கூட்டணியில் இடம் பெற்றாலும் இந்த தொகுதியை தவிர்க்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அதிமுக சார்பில் பூத் கமிட்டி உள்ளிட்ட தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தேர்தல் பணிகளை முடுக்கி விடாமல் கூட்டணி அமைந்த பிறகு முழுமையாக களம் இறங்கலாம் என அமைதி காத்து வருகின்றனர்.
பா.ஜ.க.: பாஜகவினர் தேர்தல் அலுவலகத்தை, திண்டுக்கல்லில் திறந்து பணிகளை தொடங்கி விட்டனர். அடுத்த கட்டமாக, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் அலுவலகங்களைத் திறக்க முடிவு செய்துள்ளனர். மேலும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கிக் கூறி வாக்கு சேகரிக்கும் பணிகளை ஒன்றியம், நகரம், கிராமம் வாரியாக மேற்கொள்ளுமாறு கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி: திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட நிரஞ்சனா என்பவரை நாம் தமிழர் கட்சி களம் இறக்கி உள்ளது. இதையடுத்து அக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு, வேட்பாளரை அறிமுகம் செய்து கட்சி நிர்வாகிகள் பணிகளைத் தொடங்கி விட்டனர். வேட்பாளர் பெயர், கட்சியின் சின்னம் என நகரில் போஸ்டர்கள் ஒட்டி வாக்கு சேகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம் வாரியாக வேட்பாளர் சந்திப்பு கூட்டத்தை கட்சி நிர்வாகிகள் நடத்தி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வரை காத்திருக்காமல் திண்டுக்கல் தொகுதியில் அனைத்து கட்சியினரும் களம் இறங்கி தேர்தல் பணிகளை மும்முரமாக தொடங்கி விட்டதை பக்கத்து மாவட்ட கட்சியினர் வியப்போடு பார்க்கின்றனர்.