சென்னை: காவல் மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் சென்னை காவல் துறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. வெற்றி பெற்ற வீரர்களை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார்.
தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான 63-வது தடகளப் போட்டி கோயம்புத்தூரில் உள்ள நேரு ஸ்டேடியத்தில், கடந்த 13 முதல் 16-ம்தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை பெருநகர காவல், ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை என 9 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில், சென்னை பெருநகர காவல் அணியின் ஆண்கள் தடகள அணியினர் 6 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என 16 பதக்கங்களும், பெண்கள் தடகள அணியினர் 14 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என 29 பதக்கங்களும் பெற்றனர். சென்னை பெருநகர காவல் தடகள அணி மொத்தமாக 20 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களை பெற்றது. மேலும், சென்னை பெருநகர காவல் அணிஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துக்கான முதல் பரிசு கேடயத்தை பெற்று அசத்தியது.
மேலும் சென்னை பெருநகர காவல் அணியினர், பெண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் முதலிடமும், ஆண்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் 2-ம் இடமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மூத்தோர் காவல் பிரிவில் சென்னை பெருநகர காவல்அணியினர் 8 தங்கம், 4 வெள்ளி 2 வெண்கலம் என 14 பதக்கங்களைப் பெற்றனர்.
இதையடுத்து, வெற்றி பெற்ற சென்னை காவல் வீரர், வீராங்கனைகளை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்நிகழ்வின்போது கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) கபில்குமார் சி.சரத்கர், இணை ஆணையர் கயல்விழி, துணை ஆணையர்கள் மணிவண்ணன், ஜெயகரன் உடனிருந்தனர்.