திண்டுக்கல்: வைகை அணையில் இருந்து திண்டுக்கல் நகருக்கு புதிதாக வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்லில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொழிற்பேட்டை, குஜிலியம்பாறை பகுதியில் தொழிற்பயிற்சி மையம் என பல்வேறு திட்ட அறிவிப்புகள் வெளியாகின. இதில் முக்கிய திட்டமான வைகை அணையில் இருந்து திண்டுக்கல் நகருக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத் துக்கு ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வைகை அணையில் இருந்து பைப் லைன் மூலம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 6 லட்சம் பொதுமக்கள் பயன்பெற உள்ளனர். வழியோர கிராமங்களான சின்னாளபட்டி, சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட கிராமங்கள் பயன் பெற உள்ளன.
திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்க ஆத்தூர் நீர்த்தேக்க திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை உள்ள நிலையில், தற்போது வைகை கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டால் திண்டுக்கல் நகர் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இந்த அறிவிப்பை அடுத்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே துணை மேயர் ராஜப்பா தலைமையில் கூடிய திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட் டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல் வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதில் திமுக மாநகர பொருளாளர் சரவணன், பகுதிச் செயலாளர்கள் பஜ்லுஹக், ஜானகிராமன், சந்திரசேகர், ராஜேந்திரகுமார், மாநகராட்சி மண்டலத் தலைவர் ஜான்பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.