இந்து மக்கள் கட்சியின் 29-ம் ஆண்டு தொடக்க விழா, மாநிலச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள், மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஆகியவை கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றன.
இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக வேண்டும். இதற்காக தேர்தல் பணி, பிரச்சாரம், விளம்பர குழுக்களை அமைக்கவுள்ளோம்.
தமிழகத்தில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக மற்றும் பாஜக அல்லாத கட்சிகளுக்கு மத்தியில்தான் போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றி அடையக் கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இந்து மக்கள் கட்சியைச் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக்கும் அறிவிப்பு வெளியிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.குரு மூர்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.