விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஓர் அறையில் பேன்ஸி ரக பட்டாசுக்கான மருந்துக் கலவையைத் தயார் செய்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் பரவி அடுத்தடுத்து இருந்த 3 அறைகளிலும் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன.
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த, வில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிர்த்தானைச் சேர்ந்த அபேராஜ் (62), சிவகாசி கிளியம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (24), கருப்பசாமி (20), ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (32), குருசாமி (50), சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்த முத்து (43), ராமுதேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (40), தொம்பக்குளத்தைச் சேர்ந்த சாந்தா (43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், அடையாளம் தெரியாத பெண் உடல் ஒன்றும், உடல் உறுப்புகள் முற்றிலும் சிதைந்த நிலையில் மற்றொரு உடலும் மீட்கப்பட்டன.
இதுதவிர, நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (32), ரெட்டியபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் (21), முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி (34), சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் (55) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுட்டனர். மண் தோண்டும் இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. அப்போது காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் ஆய்வு செய்த பின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கூறும்போது, "பட்டாசு ஆலையில் மருந்துக் கலவையின்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அதிக அளவில் வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததே விபத்துக்குக் காரணம். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் (விருதுநகர் பொறுப்பு) ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம்: விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்த துரதிர்ஷ்ட சம்பவம் குறித்து அறிந்து மனவேதனையடைந்தேன். இந்த கடினமான சூழலில், எனது எண்ணங்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினரை இழந்து தவிப்போருடனேயே இருக்கும். காயமடைந்தவர்களும் விரைவாக பூரண குணமடைய விரும்புகிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரூ.3 லட்சம் நிதி: இதேபோன்று, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.