சென்னை: விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிமாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்திட, முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என 2021-2022-ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ரூ.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இத்திட்டத்தினால் விழுப்புரம்மாவட்டத்தில் படித்த இளைஞர்கள்வேலைவாய்ப்பு பெறுவதுடன் மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும். முதலாவது இடஒதுக்கீடு ஆணையை ‘எஸ்யுவிஸ்டார்ட்அப் ஸ்பேஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.யுவராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், டிட்கோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து காணொலி மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரவிகுமார், எம்எல்ஏ ஆர்.லட்சுமணன், மாவட்ட ஆட்சியர் சி.பழனி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்தசேவைகள் தமிழகத்தில் தழைத்துவளர, தமிழக அரசின் கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகியநகரங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதாரமண்டலங்களை (எல்கோசெஸ் கள்) உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், நவல்பட்டில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) 147.61ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.80.55 கோடிமுதலீட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 123.23 ஏக்கர் நிலப் பரப்பளவு, சிறப்புப் பொருளாதார மண்டலமாக உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நவல்பட்டில் 1,16,064 சதுரஅடி பரப்பளவில்ரூ.59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் நேற்று திறந்து வைத்தார். இந்தத்தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தின் மூலம் சுமார் 2,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், துறை செயலர்தீரஜ்குமார், திருச்சியில் இருந்து காணொலிக் காட்சியில் மாவட்டஆட்சியர் மா.பிரதீப் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.