சென்னை: சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வெ.திருப்புகழ் தலைமையிலான குழுவினர் தங்கள் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்புமேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திருப்புகழ் தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்து, 2023-ம் ஆண்டு வெள்ள பாதிப்பு பிரச்சினை மற்றும் அது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய 86 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்தனர்.
அப்போது பேராசிரியர் ஜனகராஜன், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் டி.காந்திமதிநாதன், ஐஐடி பேராசிரியர்கள் இளங்கோ, பாலாஜி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பிரதீப், சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல்வரிடம் அளித்த அறிக்கையில், குறுகிய மற்றும் நடுத்தர நீண்டகாலத் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நகர திட்டமிடலை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மே மாதம்அளிக்கப்பட்ட அறிக்கையில் முந்தைய ஆண்டில் ஏற்பட்ட மழைவெள்ளத்துக்கான காரணங்கள், உடனடி தீர்வுக்கு என்ன செய்யவேண்டும் என்று குறுகிய, நீண்டகால திட்டங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு முழு முயற்சியாக இறங்கி, நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டது. சென்னை மாநகராட்சி தவிர, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கும் மழைநீர் வடிகால் பணிகள் வழங்கப்பட்டன. பணிகள் நடைபெறும் போது, 11-க்கும் மேற்பட்ட முறை ஆய்வு நடத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டன.
போரூர், செம்மஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் பணிகள்எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட் டன. இறுதி அறிக்கையில் கூடுதல்பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற பாதாள சாக்கடை, நகர்ப்புற திட்டமிடல், திடக்கழிவு மேலாண்மை, பருவகால மாற்றம், பொதுமக்கள் பங்களிப்பு உள்ளிட்ட 11 வகையான பிரிவுகளின்கீழ் 365 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உயர்நிலை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அதன்மூலம் பணிகளைமுழுமையாக ஆய்வு செய்து முடிக்க முடியும் என்று குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.