தமிழகம்

திமுக வாரிசுகள் இருவருக்கு சீட் உறுதி... - ஆட்டத்தை தொடங்கிய உதயநிதி!

நிவேதா தனிமொழி

இந்த மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் ’டிக்’ அடிக்கும் ஆட்களுக்குத் தான் சீட் ஒதுக்கப்படும் என்னும் தகவல் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், இரண்டு சீனியர் அமைச்சர்களின் வாரிசுகள் பெயரை அவர் பரிந்துரைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் சீனியர்கள் பலருக்கு ’பை’ ’பை’ சொல்லிவிட்டு, இளைஞர்களைக் களத்தில் இறக்குவதே உதயநிதியின் திட்டம். இந்த நிலையில், கே.என்.நேரு மகன் அருணுக்கும், எ.வ.வேலுவின் மகன் கம்பனுக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

நேருவுக்கு அடுத்தது யார்? - திமுக ஆட்சிக்கு வந்ததும் கே.என்.நேரு அமைச்சரானார். இவர் திருச்சியின் முகமாக அறியப்பட்டார். அதே நேரத்தில், அன்பில் மகேஸுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால், திருச்சியில் கே.என்.நேருவுக்கு அடுத்து திமுகவின் முகம் அன்பில் மகேஸ் என்பதாகவே பேசப்பட்டது. ஆனால், இரு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில்தான் தன் மகனை அரசியலில் இறக்க திட்டமிட்டார் கே.என்.நேரு.

2021-ம் ஆண்டு கே.என்.நேருவின் மகன் அருண் நேரு கட்சியில் இணைந்தார். எந்தப் பொறுப்புகளிலும் அவர் இல்லை என்றாலும், அருண் நேரு படங்கள் எல்லா போஸ்டர்களிலும் இடம்பெற்றிருந்தது. மக்களவைத் தொகுதியைத் தன் மகனுக்கு கொடுக்க நேரு கோரிக்கை வைத்தார். இந்தப் பிளானுக்கு தலைமை சம்மந்தித்துள்ளது. அவர் மகன் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருப்பதாக தெரிகிறது. இதனால், நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்ய இப்போதே களத்தில் இறங்கி பணியைத் தொடங்கிவிட்டார் அருண்.

திருச்சியின் முகங்களாக திருச்சி சிவா, நேரு, அன்பின் மகேஸ் என ஒரு பெரியே லிஸ்டே இருக்கிறது. இந்த நிலையில், அதில் கூடுதலாக இணைந்திருக்கிறார் அருண். ஏற்கெனவே, திருச்சி சிவாவுக்கும் நேருவுக்கும் மோதல் போக்கு முற்றியது. இதனால், லோக்கல் பாலிடிக்ஸில் சிவாவை சைலென்ட் செய்ய, அவர் தேசிய அரசியலுக்குத் தள்ளப்பட்டார்.

அடுத்ததாக, தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த நேருவுக்கு அன்பில் மகேஸ் வருகை சற்றே அதிர்ச்சியானது. குறிப்பாக, இருவரும் லோக்கல் அரசியலில் செயல்படுகின்றனர். இதைத் தவிர்க்க தன் மகனை வளர்த்துவிட நேரு நினைத்தார். ஆனால், அன்பில் மகேஸ் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமான நபராக வளம் வருகிறார். உதயநிதியிடம் நெருக்கமாக இருக்கிறார். எனவே, நேருவையும் அன்பிலையும் சரிகட்ட, இரண்டு அமைச்சர்கள் லோக்கலுக்குப் போதும் , அருணுக்கு தேசிய அரசியல்தான் சரி என ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதனால், நேருவின் மகன் தேசிய அரசியலில் அறிமுகம் ஆகவிருக்கிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டிருந்தார். தற்போது, அவர் பாஜக கூட்டணிக்கு சென்றதால், திருச்சியில் இருக்கும் பெரம்பலூர் தொகுதியைத் திமுக வழங்குவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என சொல்லப்படுகிறது.

வேலு மகன் கம்பனுக்கு வாய்ப்பு! - பல ஆண்டுகளாக திமுகவில் இணைந்து களப்பணி செய்து வருகிறார் எ.வ.வேலுவின் மகன் கம்பன். கடந்த 2021-ம் ஆண்டு கலசப்பாக்கம் தொகுதியைக் குறித்து தீவிரமாகப் பணி செய்தார். ஆனால், கம்பனுக்கு சட்டமன்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒரே தேர்தலில் அப்பா மகனுக்கு சீட் கொடுப்பது சரியாக இருக்காது. ஆனால், மக்களவையில் வாய்ப்பு தரப்படும் என்னும் உறுதி மொழி கொடுக்கப்பட்டுதான், சட்டசபை சீட் மறுக்கப்பட்டதாக தகவல் சொல்லப்பட்டது . தற்போது, அதை தலைமை நிறைவேற்றவிருக்கிறது.

திருவண்ணாமலையில் முக்கியத் தலைவராக எ.வ.வேலு வலம் வருகிறார். இந்த நிலையில், தன் மகன் கம்பனை மக்களவைத் தேர்தலில் களமிறக்க பல மாதங்களாக காய்களை நகர்த்தி வந்தார் வேலு. இப்போது திமுகவின் மருத்துவ அணியின் மாநில பொறுப்பில் இருக்கிறார் கம்பன். அவருக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் அண்ணாதுரை திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டார். அவர் செயல்பாடுகள் பெரிதாக இல்லை என சர்வே முடிவுகள் தெரிவிக்கிறது. எனவே, புதிதாக வேலு மகனை திருவண்ணாமலையில் களமிறக்க தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.

இப்படியாக, நிறைய இளம் தலைமுறைகளுக்கு வாய்ப்பு இந்த மக்களவைத் தேர்தலில் கொடுக்கப்படும். ஆனால், உதயநிதியின் லிஸ்டில் மட்டும்தான் இவர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுதியாக இவர்கள் போட்டியிடுவார்களா என்பதைத் தலைமைதான் முடிவு செய்யும்.

SCROLL FOR NEXT