உதகை அருகே முத்தநாடு மந்து பகுதியில் தோடரின பழங்குடியினருடன் நடனமாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்: ஆர்.டி.சிவசங்கர் 
தமிழகம்

நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் தோடர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

செய்திப்பிரிவு

உதகை: பழங்குடியினத்தைச் சேர்ந்த தோடர்கள் தங்களது பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி3 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகை வந்துள்ளார். உதகைராஜ்பவன் மாளிகையில் தங்கிஉள்ள அவர் நேற்று காலை தோடரின மக்களின் தலைமை மந்தான முத்தநாடு மந்து வந்தார். அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தேஷ் குட்டன் மற்றும் தலைவர்கள் வரவேற்றனர்.

ஆளுநர் மற்றும் அவரது மனைவிக்கு தோடரின மக்களின் பாரம்பரிய புத்துக்குளி சால்வை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர், அங்குள்ள தோடர்மக்களின் குலதெய்வக் கோயிலானகூம்பு வடிவ கோயில் மூன்போமற்றும் ஓடையாள் வாவ் கோயில்களில் ஆளுநர் வழிபாடு நடத்தினார். மேலும், தோடர் இளைஞர்இளவட்டக் கல்லை தூக்கியதையும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த தோடர் மக்களின் கைவினைப்பொருட்களையும் பார்வையிட்டார்.

பின்னர், தோடரின மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டு ரசித்தார். மேலும், தோடர் மக்களுடன் கைகோர்த்து, அவர்களின்பாரம்பரிய நடனமாடினார். பின்னர்,தோடரின மக்கள் மத்தியில் ஆளுநர் பேசியதாவது:

தோடர்கள் நவீனத்தை நோக்கிமுன்னேறினாலும், தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்கிறீர்கள். இதுதான் உங்களின் தனித்துவம். இந்த நவீன யுகத்திலும் கலாச்சாரத்தை கைவிடாமல் இருக்கும் தோடர் இன மூத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த ஆளுநர், பகல் 12.30 மணியளவில் உதகை ராஜ்பவனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் கவுசிக், மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு முத்தநாடு மந்து பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

SCROLL FOR NEXT