தமிழகம்

கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் 9 ஏக்கரில் நவீன பூங்கா: ரூ.16 கோடியில் அமைக்க ஒப்பந்தம் கோரியது சிஎம்டிஏ

செய்திப்பிரிவு

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் 9 ஏக்கரில் நவீன வசதிகளுடன்கூடிய பூங்காவை ரூ.16.50 கோடிசெலவில் அமைப்பதற்காக சிஎம்டிஏஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

கோயம்பேடு சந்தை வளாகம் 295 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான இது கடந்த 1996-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு பழம், பூ, காய்கறி கடைகளுக்கென தனித்தனி வளாகங்கள் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் இந்த வளாகத்தில் உள்ளன.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வளாகத்தில் பூ மார்க்கெட் அருகில் பசுமைப் பூங்காஅமைக்க சிஎம்டிஏ முடிவெடுத்தது.

பல்வேறு சிறப்பம்சங்கள், நவீன வசதிகளுடன் இந்த பூங்காவை ரூ.16.50 கோடியில் 9 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை சிஎம்டிஏ கோரியுள்ளது. இப்பூங்காவில் அடர்வனம், பசுமைபுல்வெளி, பருவகாலத்துக்கு ஏற்றவகையிலான சிறு குளம், விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மையம், நடைப்பயிற்சிக்கான இடம், திறந்தவெளி திரையரங்கம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தபூங்கா அமைக்கப்படுகிறது.

இப்பூங்காவில் திறந்தவெளிப் பகுதி அதிகளவில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும் இப்பூங்காவில் அதிகளவில் இருக்கை வசதிகள், போதிய விளக்குகள், நவீன கழிப்பிடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.

4 மாதங்களில் பணிகளை முடித்து திறக்கும் வகையில் இந்த பூங்காவுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதியில் பரபரப்பு குறைந்துள்ளது.

அதேநேரம், பொதுமக்கள் பொழுது போக்குவதற்கான போதிய இடம் இல்லாத கோயம்பேட்டில், இந்த பூங்கா அமையும் பட்சத்தில் அதிக வரவேற்பைப் பெறும் என்று சிஎம்டிஏஅதிகாரிகள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT