தமிழகம்

மெரினாவில் பறிமுதல் செய்த பஞ்சு மிட்டாயில் ரோடமைன் ‘பி’ நச்சுப்பொருள் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் விதிகளை மீறி ரசாயனம் கலந்து பஞ்சு மிட்டாய் தயாரித்தது தெரிய வந்த நிலையில், அங்கு பஞ்சு மிட்டாய் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மெரினா கடற்கரையில் கடந்த பிப்.8-ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். ஆய்வு முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது: ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் மக்கள் மனம் கவரும் வண்ணத்தை கொடுப்பதால் பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும்.

இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT