தமிழகம்

டிஎன்பிஎஸ்சி-க்கு 5 புதிய உறுப்பினர்களை நியமித்தது தமிழக அரசு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (TNPSC) ஐந்து புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஆர்.சரவணகுமார், மருத்துவர் ஏ.தவமணி, மேயர் சிட்டி பாபு தெருவைச் சேர்ந்த உஷா சுகுமார், கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகிய ஐந்துபேரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு வருட காலங்களுக்கு அல்லது 62 வயது வரை இப்பதவியில் நீடிப்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். இதில் தலைவர் உட்பட பல உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனிடையே, காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பும்பொருட்டு, தற்போது 5 புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் பெற்று உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT