உதகை: உதகை நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், நகராட்சி கடைகளின் வாடகை பாக்கியை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டியது.
கடந்த சில நாட்களுக்கு முன் மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்நிலையில், உதகை சேரிங்கிராஸ் பாரதியார் வணிக வளாகத்தில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணனுக்கு சொந்தமான கடையில் ரூ.14.25 லட்சம், அதிமுக நிர்வாகியான ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான கடையில் ரூ.4.30 லட்சம் என ரூ.19 லட்சம் பாக்கி இருந்தது. இது குறித்து ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.
இந்நிலையில், நகராட்சி ஆணையர் ஏகராஜ் உத்தரவின் பேரில், வருவாய் அதிகாரி நாக நாதன், ஆய்வாளர் திலகா ஆகியோர் சென்று இரண்டு கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர். இதையடுத்து முன்னாள் எம்.பி. கே.ஆர்.அர்ஜுணன் ரூ.4 லட்சம் மட்டும் வாடகை பாக்கி செலுத்தியதால், ஒரு கடையின் ‘சீல்’ அகற்றப்பட்டது.