சென்னை: என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர்கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகனிடம் நேற்றும் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தான் யூடியூப் சேனலில் வெளியிட்ட சுமார் 1,500 வீடியோக்களை என்ஐஏஅதிகாரிகளிடம் ஒப்டைத்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 2022-ம் ஆண்டு துப்பாக்கி,தோட்டாக்களுடன் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், கிச்சிபாளையத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேர்கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் கைதான 2 பேருடன் நாம் தமிழர்கட்சி நிர்வாகிகள் சிலருக்கும் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் நாம் தமிழர் கட்சிநிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்பட 6 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி சோதனை நடத்தினர்.
சிம் கார்டு, பென் டிரைவ்: இந்த சோதனையில் ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள், 4 பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும்தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தின்தலைவர் பிரபாகரன் தொடர்பானசட்ட விரோதமான புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ தரப்பில் கூறப்பட்டது.
தொடர்பு இல்லை: இந்த 6 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ்சாலையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன்நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.
விசாரணை முடிந்துவெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘`நான் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நான் நடத்திவரும் ‘சாட்டை’ யூடியூப் சேனலின் ஓட்டுமொத்த வீடியோ பதிவுகளை கேட்டனர். 1,500 வீடியோக்களை ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்து கொடுத்துள்ளேன். ஓமலூரில் கைதானவர்களுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆயுத போராட்டம், ஆயுத புரட்சியை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை'’ என்றார்.
சட்ட விரோத நிதி: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் நிதி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.